Sunday, December 4, 2011

போதும் இம்மண்ணில் உங்கள்  வேதம்

மனிதன்
மனிதம்
பொய்.

இதயத்தின் ஆழத்தில் 
அலறல் அரவங்கள்.

கண்களில் குருதி
அருவிபோல்.

சடலங்களைக் குவிப்பதில்
புனிதம் என்னக் கண்டீர்?

அணையுடைத்த வெள்ளமாய்
அழுகிறேன்.

ஒரு
மூலையின் ஓரமாய் 
பைத்தியமாய் ஒன்றுகிறேன்.

மொட்டுக்களைப் பொசுக்கும் 
உங்களைக் 
கொன்றுபோடவே 
விரும்புகிறேன்.


போதும்
இம்மண்ணில்
உங்கள் 
வேதம்
நியாயம்
மட்டை
மண்ணாங்கட்டி.

உயிர்தவிர
ஒன்றுமேயில்லை அவர்களிடம்.
விட்டுவிடுங்கள்.

ஒரு
மூலையின் ஓரமாய் 
பைத்தியமாய் ஒன்றுகிறேன்.

மொட்டுக்களைப் பொசுக்கும் 
உங்களைக் 
கொன்றுபோடவே 
விரும்புகிறேன்.

Monday, September 26, 2011

முதற்முத்தம்

அன்றொரு நாள்
ஏதோ மயக்கத்தில்
நீ
சிந்திவிட்ட முதற்முத்தத்தை
இதழில் வாங்கி
சிதறாமல் வைத்துக்கொண்டேன்-என்
நாடி நரம்பினில்
ஏற்றிக்கொண்டேன்-உன்
காதலை
இறுகக் கவ்விக்கொண்டேன்-அன்று
புதிதாய்
பிறந்தும் கொண்டேன்...

நாட்கள் சற்று
நின்றே மறைந்தன...

மழையாய்...வெயிலாய்...
இசையாய்...தென்றலாய்...
கனவாய்...நனவாய்...
நிழலாய்...உயிராய்...
அனைத்துமாய் உன்னை
அள்ளிக்கொண்டேன்...
கிடைத்தப்பொழுதில்
அளந்துக்கொண்டேன்...
சற்றே கண்ணயர்ந்தேன்...
விண்ணுக்குள் புகுந்துவிட்டாய்...

உன்
கல்லறையின் ஓரமாய்
நிமிடந்தோறும்
உடைந்து பிறக்கின்றேன்...
சிதைந்து இறக்கின்றேன்...

ஒன்றுமேயில்லையடி..
இன்று நான்
எதுவுமாயில்லையடி...

மரண மயக்கம்
விரைந்து வரும்-அன்று
நான்
மயங்கி நிற்பேன்...
நீ
விட்டுச்சென்ற
முதற்முத்தம்
என்னிதழில்
கலங்கி நிற்கும்...
உன்னிதழ் தந்து
எடுத்துக்கொள்...
தடையின்றி
மரணிக்கத் துவங்கிடுவேன்...

Sunday, February 13, 2011

கவிதையா? இல்ல..

கவிதையா? என்னையவா?
ம்ம்… காதல் கவிதை எழுதலாமா?
.
.

‘பெண்ணே…
20,000 rpm-ல் உன்னைச் சுற்றி வருகிறேன்…
கொஞ்சம் கண்டுகொள்ளடி….

SDS அல்ல என் இதயம்…
துணிந்துத் தொட்டுப் பாரடி….

உன் EDTA மனதைக்
கரைக்க
என் காதல் வருகிறது பார்
NaOH pellet-களாய்….

Overnight incubation-ல்
Bacteria வை வளர்ப்பாய்…
என் காதலை வளர்க்கமாட்டாயோ?...

MilliQ சுத்தமடி
என் மனம்… ஏற்றுக்கொள்…

Restriction செய்ய உன் அப்பா-அம்மா வந்தாலும் சரி…
Digestion செய்ய உன் அண்ணன்-தம்பி வந்தாலும் சரி…
Ligase-இன் சக்கரவர்த்தி நான்…
இணைத்துக் கொள்வேன் உன்னை…

நீ விட்டுச் சென்ற
Microgram புன்னகையை
PCR போட்டு வைத்துள்ளேன்…
சரி என்று சொல்லடி…
Family construct பண்ணலாம்’…

அப்பாடா…..எழுதியாச்சு….
மறுபடியும் படிப்போமா?
.
.

கடவுளே …
இது
காதல் கவிதையா?
Maniatis lab manual ஆ?

ஒளிந்து பார்...

அடியே…
மலரோடு மலராய்
ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சியா காட்டுகிறாய்?
முடிந்தால்
Pubmed-ல் ஒளிந்துபாரடி….
உன்னை
பத்தே நொடியில்
தூக்குகிறேன்… :P

Tuesday, January 4, 2011

புலிவெறிக்காதல்

‘யாரங்கே ?
இந்தக் கயவனைக்
கைது செய்து
அடையுங்கள் சிறையில்…’

‘வேண்டாமப்பா வேண்டாம்…
விட்டுவிடுங்கள் என் பிரபுவை…’

‘என்ன? பிரபுவா?
கொடுங்கள் இவனுக்குக்
கசையடிகள் நூறு…’

‘வேண்டாமப்பா வேண்டாம்…
விட்டுவிடுங்கள் என் நாதனை…’

‘என்ன? நாதனா?
கொடுங்கள் இவனுக்குக்
கசையடிகள் இருநூறு…’

‘அடியே…
உன் பேச்சைக் குறையடி … - நீ
பேசப்பேச
உன் அப்பா
என்னை
உண்டு - இல்லை எனச்
செய்துவிடுவார் போலிருக்கிறது …’

‘வேண்டாமப்பா வேண்டாம்…
விட்டுவிடுங்கள் என் மணாளனை…’

‘என்ன? மணாளனா?
வஞ்சி நாட்டு
இளவரசியாம் உனக்கு
இந்த
இஞ்சி தின்ற குரங்கா மணாளன்?

‘ஆ.. அப்பா..
இவரா இஞ்சி தின்ற குரங்கு?
இவர் யார் என்று தெரியுமா?’

‘தெய்வமே…
என்ன சொல்லப் போகிறாளோ?’

‘நான்குகால் புலியையே
வேட்டையாடியத் தங்களுக்குத்
தெரியவில்லையோ
இவரொரு இருகால் புலியென்று…’

‘ஓகோ.. இருகால் புலியோ?
அப்படியானால்,
வீரர்களே…
விட்டுவிடுங்கள்
இவனைப் புலிக்குகையில்...
என்ன செய்கிறதென்று பார்ப்போம்
இந்த இருகால் புலி…’

‘அய்யய்யோ… புலிக்குகையா?...’

‘அப்பா…
கோழையென்றா நினைத்தீர்கள் இவரை?
ஒரு புலி என்ன?
பத்துப் புலிகளை விடுங்கள் …
கண்ணிமைக்கும் நேரத்தில்
கடைவாய்ப்பற்களைப் பெயர்த்தெறிவார்
என் மணாளன்…’

‘அடிப்பாவி…
உன் அப்பா
புலிக்குகை என்றபோதே
அடிவயிற்றில்
ஆழிப்பேரலையடி…

நடுநிசி நேரம் பார்த்து
அரண்மனை அந்தப்புரம் வா…
உற்சாகம் காணலாம் என்றாய்…
ஊடற்செய்துப் பழகலாமென்றாய்…
கட்டியணைக்கலாம் என்றாய்…
காதற்வானில் பறக்கலாமென்றாய் …
நீ கூறியதை நம்பி
தாவி வந்தால்
புலியிடமாத்
தள்ளிவிடுகிறாய்…பாதகத்தி…

ஆ… மழை…
என்னிலைக் கண்டு
வானமும் கண்ணீர் விடுகின்றதோ?’

‘வீரர்களே…
மழை நின்றபின்
தள்ளிவிடுங்கள்
புலிக்குகையில் இவனை…’

‘அப்பா…
அடாத மழையிலும்
விடாது போர்புரிவார்
என் மணாளன்….
இப்போதே தள்ளிவிடுங்கள்…’

‘அடிச் சண்டாளி…
நான் என்னடி செய்தேன் உனக்கு?
ஏன் இந்தக் கொலைவெறி?
உன் அப்பா விட்டாலும்
நீ விடமாட்டாய்ப் போலிருக்கிறதே...
அப்படி என்னடி
ஒரு புலிவெறிக்காதல்
என்மேல் உனக்கு?...’

‘டேய்…..’

‘ஆ… இதென்ன?
என் அம்மாவின் குரல் கேட்கிறதே…’

‘டேய் குரங்கு…..’

‘அம்மா… நீங்களுமா?
மறுபடியும் முதலிலிருந்தா?..
ஆண்டவா…’

..,.-.- ..- ...-...
... ...-.-.... .. .-..
.... ... .....
...-.-.--.-
.-.-.

‘டேய் குரங்கு…. எந்திரிடா…
மணி பத்தாச்சு…
இப்ப எந்திரிக்குரியா
இல்ல
சுடுதண்ணிய ஊத்தவா?'...
.
.
.
.

‘சப்பா…
கனவா இது?
அம்மா…
என் வயித்துல பால வார்த்தீங்க………’