Monday, December 27, 2010

சளைத்தவனா நான்?

பெண்ணே...
உன்
'காமன்வெல்த்' பார்வைக்கும்
'ஆதர்ஷ்' புன்னகைக்கும்
'போபர்ஸ்' மௌனத்திற்கும்
கொஞ்சமும் சளைத்தவனா நான்?

கொண்டுவந்து
கொட்டிக் குவிக்கின்றேன் பார்..
என்
'2ஜி ஸ்பெக்ட்ர'க் காதலை....

Saturday, October 9, 2010

இவள் எதற்கு இப்போது?

சனிக்கிழமை.
நள்ளிரவு 2 மணி.

இரவைத்தின்றபடி
படுக்கையில் புரண்டேன்..
'என்ன ஆனது எனக்கு?'

'இதோடு ஆயிரம் முறை'யென
தலையணை சொல்லியது கணக்குப்பிள்ளையாய்...
தலையில் அடித்துக்கொண்டு
தலையணைக்கருகில் என் தூக்கம்,பரிதாபமாய்...

நான் என்ன செய்வேன்?
என் விண்மீன் தோட்டத்தில்
அவள் நட்பை
ஒரு விண்மீனாய்தான் வளர்த்தேன்..
இந்நாட்களில் மட்டுமெப்படி
முழுநிலவாய்த் தெரிகின்றது?

'அடடா...அப்படியா சங்கதி..
நானே சொல்கிறேன்..
உன் 'மார்க்ஸ்' கண்களுக்கு
அவள்
'ஜென்னி'யாய்த் தெரிகிறாள்'
சொல்லிச் சிரித்தது
சுற்றாத மின்விசிறி.

ஆ.. அவளை நான் விரும்புகிறேனா?

'அட மடையா...
இனியுமா தெரியவில்லை..
ஒப்புக்குத் துடிக்கும்
உன் இதயத்தைக் கேள்'
பணித்தது போர்வை.

இல்லை...அவள் என் தோழி...

'உண்மைதான்...
உனக்கு அவள் தோழிதான்...
இனியும் அவள் தோழிதான்...
மறுக்கவில்லை..
இதுகாறும்
நீ காணும்
நிலைக்கண்ணாடி என்றிருந்தாள்..
நின் கண்களாகவே இனியிருந்திடுவாள்
நின்னவள் நாள்தோறும்..

தவறேதுமில்லை-நீ
தப்பிவிட
வழியேதுமில்லை...
வெட்கம் வேண்டாம்..
ஒற்றுக்கொள்...'
அரவணைத்துச் சொன்னது
அன்பான மனம்.


ஆம்...உண்மை...
அவளை நான் விரும்புகிறேன்...
எவையெல்லாம் அழகழகாய்த் தெரிந்தனவோ
அவையெல்லாம் அவளாகவேத் தெரிகின்றன
இப்போதெல்லாம்...

'வாடா அப்படி வழிக்கு..
எடு என்னை..
இப்போதே சொல்லிவிடு'
கட்டளையிட்டது செல்பேசி.

இப்பவா...அட போப்பா...
மணி இரண்டரை...
இ.......
.
.
.
(செல்பேசி அழைப்புச்சத்தம்)
.
.
.
.
யாரது இந்நேரத்தில்?
ஆ... அவளேதான்...

அவள் எதற்கு
இப்போது அழைக்கிறாள்?
.
.
.
.
.
.
.

Sunday, July 25, 2010

விழி மூடிய நொடிப் பொழுதில்....

பேருந்து நிலையம்
பிதுங்கிக் கொண்டிருந்தது...

எனக்கானப் பேருந்துக்காக
விழி பிதுங்கியபடிக்
காற்றுக் கொண்டிருந்தேன்
நான்,கையில் பெட்டியுடன்...

அந்த நெரிசலிலும்
விண்மீன் சல்லடையில்
வடிகட்டிய முழுமதியாய்த்
தெரிகின்றாள் அவள்...

ஆகா,
இவளும்
பேருந்திற்குத்தானா?
இறைவா..
உன் கருணையே கருணை...

அடடா...
என்ன அழகு...?
இவள் எப்படி
தனியாய் நிற்கிறாள்?
என்னை வேறு
கவிஞனாக்கிக் கொண்டு...

ஆகா...
யாரை அழைக்கிறாள்
அலைபேசியில்?
மணமானதுபோல்
தெரியவில்லையே...
அப்பாவையா? அண்ணனையா?

நல்லவர்களே...
வந்துவிடாதீர்கள்...
தாவிக்குதிக்கும்
என்
மனக்குரங்குக்கு
'ஆப்பு'வைத்து விடாதீர்கள்...

காற்றில்
அவள் கண்களை
முத்தமிடும்
கூந்தல்...

ஒரு கையால்
அக்கூந்தலை
சரி செய்கிறாள்...

மறுகையால்
கழுத்தணியை
இதழில்
வைத்துக்கொள்கிறாள்...

நகம் கடிக்கின்றாள்..
அவ்வப்போது
என்னையும் பார்க்கின்றாள்...

அய்யோ...அழகே...
அருகில் வந்து
என்
கரங்களைப் பற்றிக்கொள்ளடி...
கவிதைவலிப் பற்றிக்'கொல்'கிறது...

பேருந்து வந்துவிட்டது...

முண்டியடிக்கும் கூட்டத்தில்
நான்
நொண்டியடிக்க
என் கண்கள்
அவளைத் தேடி
வலை வீச...

ஆகா...
அருகில் நிற்பது
அவளேதான்..
அழகேதான்...

இறைவா...
கூரையைப் பிய்த்துக்
கொடுத்துவிட்டாயே...

நெரிசலில்
என்னைப்
பனிக்கட்டியாய்
அவள் இடிக்க,

என்னை மறந்து
விழி மூடிய நொடிப் பொழுதில்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

அவளையும் காணவில்லை...
என்
பெட்டியையும் காணவில்லை....







அடிப்பாவி..... :(

Thursday, July 8, 2010

சின்னதாய் ஒரு புரிதல்...

சில நாட்களின் நகர்தலில்
சின்னதாய் ஒரு புரிதல்...

புரிதல் என்னவெனில்,

இயற்கை இட்டுவைத்த
காலப் புள்ளிகள்
ஒருபோதும் 'முற்று' பெறா...-மாறாய்
அவையாவும் 'இயக்கப் புள்ளிகள்'....

ஒருகால் அவை 'முற்று' பெறின்
இயக்கம் 'முற்று' பெறும்.
இயக்கம் 'முற்று' பெறின்
இயற்கை ஏது?-ஆயினும்

இங்கே
எனக்கென்று 'புள்ளி'
எதுவும் உண்டா?-உண்டு...

உயிர்களனைத்திற்கும்
ஒரே புள்ளி-'தொடர்ச்சிப்புள்ளி'

காலம் கணித்த
எல்லை வரை
நாம்
தொடர்ச்சிப்புள்ளிகளாய்த்
'தொடரவே' வேண்டும்...

பின்தொடர்வது 'இயற்கை'...
அதிடுவதே நமக்கு 'முற்று'...

ஆம்...
புரிதல் புலப்படுகின்றது
நன்றாய்...

இந்நாட்களில்
நான் வைத்துக்கொள்வது
தொடர்ச்சிப்புள்ளியே....

அன்பு,நட்பு,
கல்வி,காதல்,
உழைப்பு,உயர்வு,
மனிதம்,மாண்புவென
அனைத்திற்கும்...அனைத்திற்கும்
நான்
வைப்பது 'தொடர்ச்சிப்புள்ளியே'...

மீண்டும் மீண்டும்
வைத்துக் கொள்கின்றேன்...

மழை,வெயில்,
இரவு,பகல்,
நிமிடம்,நேரம் என
அனைத்துமே
'தொடர்ச்சிப் புள்ளிகளாய்'...

எதற்காக
'முற்றுப்புள்ளி'?...

சில நாட்களின் நகர்தலில்
சின்னதாய் ஒரு புரிதல்...

Friday, July 2, 2010

நீ பிறந்த நாளில்..

என் தங்கை..

பாடாய் என்னைப் படுத்த-என்
பெற்றோர் தந்த
ஒரு
பூனைக்குட்டி...-இன்று
வளர்ந்தக் குட்டி...

நாளை அவள் பிறந்தநாள்...

வேலைக்கு விடுப்புக் கூறி
துணிக்கடையில்
இன்று நான்...

சென்ற வருடம்
நான்
சேலை வாங்கித்தர
அதை அவள்
கட்டச் செய்ய
என் அம்மா
பட்ட பாடு
நினைவிலிருப்பதால்

அவள்
பிசாசாய் விரும்பும்
கடல்நீல நிறத்தில்
சுரிதார்
ஒன்று வாங்க...

அப்பாடா...
கிடைத்துவிட்டது...
இதையவள் உடுத்தினால்
பல மலர்களுக்கு
இனி
'பந்த்' தான்...


வேறென்ன...
.
.
ஆ..
மல்லிகைப்பூ...
அதை
அம்மாவையே வாங்கிச்
சூடச்சொல்வாள்...
.
.
அப்புறம்..

கேசரி...
அதுவும்
அம்மாதான்...
.
.

வேற...
.
.
ஆ...
கார்நேட்டோ ஐஸ்கிரீம்..
அதை
அப்பாவைத்தான்
வாங்கச் சொல்வாள்...-அவர்
மடியில்தான்
சாப்பிடச் செய்வாள்...
.
.
.

வீட்டிற்கு
வந்துவிட்டேன்...
.
.

சாய்நாற்காலியில்
சாய்ந்தபடி
அப்பா...
.
.

உள்ளிருந்து வருகிறது
அம்மாவின் குரல்...
.
.

'சிவா..
வந்துட்டியாடா..
இங்க வந்து
அவ
'போட்டோ'வ எடுத்துக்குடுடா..
தொடச்சுப் பொட்டு வைக்கணும்'...
.
.
.
.

Friday, June 25, 2010

'டேய் முருகா- ரெண்டு போடவா'...

அரசு இடைநிலைப்பள்ளி
வெளிப்புற வகுப்பு
மாலை மணி 4.30

'ஒரு கனசதுரத்தின் பரப்பு காண......

டேய் முருகா...
ஒழுங்கா முட்டிப் போடுறியா-இல்ல
ஒன் முதுகுல ரெண்டு போடவா'...


'வேணா டீச்சர்.....

சாமி...-இந்த
சுமதி டீச்சர் வாயி-இன்னிக்குமா
சூத்திரம் போடணும்...

நாளைக்கு என்ன நாளு...
எல்லாரும் புதுத்துணி வாங்கிட்டாங்க...
எவ்ளோ பெரிய வெடில்லாம் வாங்கிட்டாங்க...

எனக்கு இன்னும்
எதுவும் இல்ல...

ஆத்தாகிட்டக் கேட்டா
அடிக்கவருது ஆத்தா...
அப்பாகிட்டக் கேட்டா
குடிச்சுட்டுவருது அப்பா'...


'டேய் முருகா- ரெண்டு போடவா'...


'வேணா டீச்சர்...

சாமி...-இந்த
வீட்டு மணிய
வெரசா அடிக்கச்சொல்லு...

கடத்தெருக்குப் போலாமுனு
காலைலயே சொல்லுச்சு ஆத்தா...

வெரசாப் போவணும்..
வெரசாப் போவணும்...

புதுத்துணி வாங்கணும்...
புல்லட்டு வெடி வாங்கணும்...
சங்குச்சக்கரம்,புசுவானம்...-ஆத்தாடி
எவ்ளோ வாங்கணும்'...


'டேய் முருகா- ரெண்டு போடவா'...


'வேணா டீச்சர்...

சாமி...-இந்த
வீட்டு மணிய
வெரசா அடி...

முக்கோணச் சூத்திரம்
சொல்ல மறந்து
முட்டிப் போடுறேன்
முக்காமணி நேரமா...

என் நெனப்பெல்லாம் கடத்தெருல...
என்கிட்டப்போயி
வட்டஞ் சதுரம்னா எப்புடில...
எம்மா நேரமா காத்துட்டுருக்கேன்- இந்த
வீட்டு மணிய எவனாச்சும் அடிங்கள...


'டேய் முருகா- ரெண்டு போடவா'


'வேணா டீச்சர்'....

Friday, May 7, 2010

வாப்பா வாப்பா

வெகுநாள் பார்வைப் பழக்கம்-இன்று
பழகிப் பார்ப்பது என்றெண்ணி
அவளருகில் சென்றேன்..

அவளும்
"வாப்பா வாப்பா" என்றாள்..

அடடா...
இதென்ன...
ஒரு மல்லிகைக் காடு
சில சென்டிமீட்டர் திறந்து அழைக்கின்றதே..
ஈரடிகள் மேலும் வைக்கின்றேன்..
அவள் இதழ்கள்
இன்னமும் வேகமாய்
"வாப்பா வாப்பா" ...

இனி ஒரு தடையில்லையென
மின்னலாய் விரைந்து
அவளருகில் சென்றால்...
.
.
.
.
அருகில் நின்றது
அவள் "வாப்பா".... :(

Sunday, April 25, 2010

தூரத்தில் கேட்கின்றது ஒரு.........

மாமல்லக் கடற்கரை
மாலை மணி ஐந்து
நான்-அவள்......
.
.
.
அருகில் வந்த
அழகு மழலையின்
பந்துக்குப் பங்குக்கேட்டு
அடம்பிடித்து விளையாடினாள்
என்னவள்-நான்
அவளை இரசித்தபடி....
.
.
.
வீசும் காற்றில்
என்
கன்னந்தொட்டு
கையில் இறங்கியது - ஒரு
கசங்கியக் காகிதம்-சில
வரிகளைச் சுமந்து.....
.
.
படிக்கின்றேன்..

"உன் மீதான
என் அன்பினை
என்னால் செய்து
உன்னிடம் தந்தேன்
நிமிட வயது சிசுவை-அதன்
தாயிடம் தருவது போல்...

நீ.....
சூறைக்காற்றில்
நொடிந்து உடையும்
ஒரு கருப்புக் குடையைப்
பிடிப்பதுப்போல்
பிடித்தாய்-விட்டுவிட்டாய்....

மகிழ்ச்சியடி பெண்ணே...

இதோ....
என் முன்னால்
பல நூறுக் கருப்புக்குடைகள்
மிதக்கின்றன கிழிந்தபடி
இக்கடலில்....
.
.
அதோ....அதோ....
எனது குடை....
உன்னை நேசித்ததன்றி
ஒரு பாவமும் செய்யாத
எனது குடை....
.
.
அழுகின்றதே எனது குடை.....
இறைவா....
என்னவென்று ஆறுதல் சொல்ல...- அன்றியும்
நான் அதனிடம்
செல்லவேண்டும்-
செல்வேன்......"
.
.
.
.
'என்ன அது ?'
என்றாள் என்னவள்
அருகில் அமர்ந்து...

'வெற்றுக்காகிதம்'
என்றுச் சொல்லி
விட்டுவிட்டேன்,காற்றில்....
.
.
.
தோளில் சாய்ந்துகொள்கிறாள்
என்னவள்.....
கடலினை மேய்ந்தபடி
என் கண்கள்....
.
.
.
.
தூரத்தில் கேட்கின்றது
ஒரு
அழுகுரல்.......